குருவிற்காக நடத்திய பாசப் போராட்டம் வெற்றி… நோ டிரான்ஸ்பர்… சாதித்த மாணவர்கள் !!

First Published Jun 21, 2018, 3:55 PM IST
Highlights
thiruvallur students success in transfer of teacher


திருவள்ளூர் அருகே பணி மாறுதல் பெற்ற ஆசிரியர் ஒருவரை அப்பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு கெஞ்சி எங்களை விட்டு போகாதீர்கள் என கதறி அழுத சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து அவரது பணியிட மாற்றத்தை மாவட்ட கல்வி அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தங்களது பாசப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட  மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பகவான் என்ற இளைஞர் 5 ஆண்டுகளுக்கு முன் பணிக்கு வந்தார். மாணவ மாணவிகளுக்கு சக தோழனாக இருந்து அவர் கல்வி கற்றுத்தர ஆங்கிலப் பாடம் அனைத்து மாணவர்களுக்கும் பிடித்தமான பாடமானது.

பாடம் எடுப்பதில் அவரது அணுகுமுறை, பழகுவதில் கண்ணியம், வழிகாட்டுவதில் எடுத்துக்கொண்ட சிரத்தை காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவியருக்கு பிடித்தமானவராக மாறிப்போனார் பகவான். இந்நிலையில்தான் பகவானுக்கு பணியிட மாறுதல் கிடைத்தது.

இதை அறிந்த மாணவ மாணவியர்கள் கதறி அழுதனர். நீங்கள் பள்ளியை விட்டு போகக் கூடாது, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். ஆனால் பணியிட மாற்றம் பெற்றதால் அதற்கான ஆர்டரை வாங்கப் பள்ளிக்கு வந்தார்.

இதை அறிந்த அனைத்து பள்ளி மாணவ, மாணவியரும் வகுப்புகளைப் புறக்கணித்து அவர் முன்னால் அமர்ந்து பள்ளியை விட்டுப் போகாதீர்கள் என்று அழுதனர். அவர்களுக்கு சமாதானம் கூறிய ஆசிரியர் பகவான் ஒரு கட்டத்தில் அவர்களது அன்பை எண்ணி அவரும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் மாணவ, மாணவியர் அவரை சூழ்ந்துகொண்டு கட்டிப்பிடித்தபடி எங்களை விட்டுப் போகாதீர்கள் சார் என்று கதறி அழுதனர்.

இதனால் அவர் வெளியே செல்ல முடியவில்லை. மற்ற ஆசிரியர்கள் வந்து சமாதானம் செய்தும் மாணவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை வரவழைத்து சமாதானப்படுத்தி பின்னர் ஆசிரியரைப் போக அனுமதித்தனர்.

சாட்டை திரைப்படத்தில் ஆசிரியர் சமுத்திரகனியின் கதாபாத்திரத்தை நினைவு படுத்தும் வகையில்  நடந்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. இந்நிலையில் இந்த  சம்பவம் ஊடகங்களில் வெளியானதையடுத்து அவரது பணியிட மாற்றத்தை மாவட்ட கல்வி அதிகாரி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தங்களது பாசப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளதாக மாணவர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

click me!