
சென்னை, வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள பீட்சா விற்பனையகத்தில் டெலிவரி செய்யும் பணியில் இருந்து வருகிறார்.
மணிகண்டன், நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் தனது வேலையை முடத்திவிட்டு, பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பாடி மேம்பாலம் அருகில், கொரட்டூர் போலீசார் வாகன சோதனை நடத்தி வந்தனர்.
அபபோது அவ்வழியாக வந்த மணிகண்டனின் பைக்கை, போலீசார் வழிமறித்தனர். போலீசார் விசாரணையின்போது, மணிகண்டன் குடியோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டனை கொரட்டூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில், மணிகண்டன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பைக்கை ஸ்டேஷனில் விட்டு விட்டு வீட்டுக்கு செல்லும்படி மணிகண்டனிடம் போலீசார் கூறினார்.
அதற்கு மணிகண்டன் சம்மதிக்கவில்லை. அப்போது ஏட்டு சித்துராஜ் என்பவர் மணிகண்டனிடம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென மணிகண்டன், அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து ஏட்டு சித்துராஜைக் குத்தினார். இதனால் ஏட்டுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகபோலீசார், சித்துராஜை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் சித்துராஜிக்கு முகம், உதட்டில் தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். போலீஸ் நிலையத்திலேயே காவலர் ஒருவரை பாட்டிலால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.