கன்னியாகுமரியில் பிரமாண்ட திருப்பதி கோவில் !! 27 ஆம் தேதி திறப்பு விழா !!

By Selvanayagam PFirst Published Jan 5, 2019, 9:00 AM IST
Highlights

தமிழகத்தின் தென் மாவட்டமான கன்னியாகுமரியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் திருப்பதி கோவில்  வரும 27 ஆம் தேதி திறக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீனிவாச திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கோவில் கட்ட விவேகானந்த கேந்திர நிர்வாகம் 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியது.

அதைத்தொடர்ந்து, கோவில் கட்டும் பணி தொடங்கியது. இங்கு திருப்பதி ஏழுமலையான் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் கருவறையில் உள்ள ஏழுமலையான் வெங்கடாஜலபதி பாதத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி சித்திரை விஷூவை முன்னிட்டு அற்புத சூரியஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் முக்கிய பிரசாதமாக வழங்கப்படும் லட்டு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் தலைமை அதிகாரியான அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தேவஸ்தானம் சார்பில் பல்வேறு மாநிலங்களில் திருப்பதி கோவில்கள் போன்று கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவில் ஜனவரி 27 ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதேபோல், ஐதராபாத்தில் திட்டமிட்டபடி மார்ச் 13-ம் தேதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

click me!