நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து கோவையில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, பாஜகவினர் தடுத்து நிறுத்தி பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரச்சாரத்தில் மோதல்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் போட்டியானது வலுவாக உள்ளது. இந்தநிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக தினேஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று இரவு ஒண்டிபுதூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போதுஅந்த பகுதிக்கு வந்த பாஜகவினர் மே 17 இயக்கத்தினர் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமர் ராமசாமி தலைமையில் வந்த கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போட்டி முழக்கம் - பதற்றம்
17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை பாஜகவினர் மிரட்டவும் செய்தனர். அதற்கு பதிலடியாக திருமுருகன் காந்தியும் பா.ஜ.கவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. பாரத் மாதா கி ஜே என பாஜகவினரும் , ஜெய் பீம், பெரியார் வாழ்க , தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழக்கங்களுடன் மே 17 இயக்கத்தினரும் முழக்கம் எழுப்பினர்.
மே 17 இயக்கத்தினரின் பிரச்சாரத்தை பாஜக தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. மே 17 இயக்கத்தினர் உரிய அனுமதி பெற்று பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொள்ள விடாமல் தடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்