
பெண்களிடம் தங்க சங்கிலி பறித்து செல்லும் சம்பவம் சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், சென்னையை அடுத்த குன்றத்தூரில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்கசங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று காலை அரும்பாக்கத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 15 சவரன் நகை பறித்து செல்லப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், தங்க சங்கிலி அறுபடாத நிலையில், அந்த பெண் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, குன்றத்தூரைச் சேர்ந்த அசோக்குமார். இவர் நேற்று தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஜெயஸ்ரீயின் பின்னால் வந்த நபர் ஒருவர், அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை திருடன் பறித்து சென்றபோது, ஜெயஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜெயஸ்ரீ, அசோக்குமார், போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம் சென்னை, அரும்பாக்கத்தில் நடந்துள்ளது. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி மேனகா, உறவினர் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரும்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் சாலை, பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள், மேனகாவின் கழுத்தில் இருந்த சுமார் 15 சவரன் எடை கொண்ட இரு தங்க சங்கிலிகளை பறித்து சென்றனர். அப்போது தாலி சங்கிலியுடன், மேனகாவையும் பைக்குடன் வந்தவர்கள் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.
தாலி சங்கிலி அறுபட்ட நிலையில் மேனகா சாலையில் விழுந்தார். கொள்ளையர்கள் நகையுடன் தப்பிச் சென்றுள்ளனர். இதில் மேனகாவுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேனகா, கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டனர். சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார், கொள்ளையர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.