தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது.
இதில் ஏராளமான மக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகளுக்காக மனுக்களை அளித்தனர். இதனிடையே தூத்துக்குடியில் கடந்த நான்காண்டு காலமாக மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க வேண்டும் என்ற அந்த ஆலை அமைந்துள்ள தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் கல்லூரணி, மீளவிட்டான் உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளதால் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். வேலைக்காக பிற ஊர்களில், வெளிமாவட்டங்களில் சேர்ந்து சென்று வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கும் போதிய வருவாய் இல்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கே வேலை கிடைக்கும். எனவே இந்த ஆலையை திறக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், ‘தெற்கு வீரபாண்டியபுரம், கல்லூரணி பகுதிகளிலிருந்து நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்துள்ளோம். எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலையில்லாமல் உள்ளனர். ஆலை திறக்கப்பட்டால் எங்கள் ஊரை சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும் எங்கள் கிராமத்திற்கான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை ஸ்டெர்லைட் நிறுவனம் செய்து வருகிறது. எனவே இந்த ஆலை உடனடியாக திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.