மாற்றுதிறனாளிகளுக்கு கிராமங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திருநங்கை டாக்டர்... குவியும் வாழ்த்து!

By sathish k  |  First Published Oct 11, 2018, 5:11 PM IST

மதுரை மாவட்டத்தின் முதல் திருநங்கை பிசியோதெரபிஸ்ட்... திருநங்கை என்பதால் ஸோலு பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா?


மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறையால் செல்லம்பட்டி பகுதிகளில் மருத்துவராகப் பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள இவர், வருடத்துக்கு 200 கிராமங்களுக்கும் மேல் பயணித்து, அங்கு பாதிக்கப்பட்டுள்ள மன நலம் குன்றிய குழந்தைகளுக்கு மருத்துவம் செய்வதுடன், அவர்களை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பி அவர்களுக்கான 'சிறப்புக் கல்வி' பயில வைக்கவும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

திருநங்கை என்பதால் ஸோலு பட்ட பாடுகள் கொஞ்சமா நஞ்சமா?

Tap to resize

Latest Videos

'தமிழின் முன்னை பத்திரிகைக்கு  ஸோலு அளித்த பேட்டியில் கண்ணீர்க்கதை நெக்குருகவைக்கிறது.

"2008 கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் என் இளங்கலைப் பட்டத்தைத் தொடர நான் சாத்தூரிலிருந்த என் வீட்டிலிருந்து வெளியேறினேன். என் உடல்கூறு மாற்றங்களை உணர்ந்த நான் திருநங்கையாக மாறுவது குறித்த குழப்பக் கேள்விகளுடன்தான் என் பள்ளிக் கல்வியை முடித்தேன். கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும்போது எனது மாற்றத்தின் அவசியம் உறுதியானது. 2010இல் முழுவதும் திருநங்கையாக என்னை நான் மாற்றிக்கொண்டேன். மீண்டும் கல்வியைத் தொடர கல்லூரிக்கு சென்றபோது - கல்லூரி முதல்வர் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார். கடுமையான போராட்டத்துக்கும் கெஞ்சல்களுக்கும் பின்னர் 'ஆண் உடை'யில் நான் வந்தால் அனுமதிக்கலாம் என்று நிர்வாகம் முடிவு செய்தது . மிகுந்த மனத்துயரத்துடன்தான் நான் அவ்விதம் செயல்பட்டேன்...

.......துன்பங்களிலிருந்தும், சமூகப் புறக்கணிப்புகளிலுமிருந்து மீள உறுதி கொண்ட நான் படித்தேன்...படித்தேன்...படித்துக் கொண்டே இருந்தேன். கல்லூரியில் விருதுகள் வாங்கிக் குவித்தேன். சிறந்த மாணவி என்கிற தகுதியுடன் கல்வியை முடித்து நான் வெளியேறும்போது, கல்லூரி முதல்வர் என்னைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தார். நான் எனது வெற்றியை உணர ஆரம்பித்தேன்....."

பாலியல் கேலிகள், துன்புறுத்தல்களிலிருந்து மீள - மற்றெவரையும்விட அதிகமாக தகுதியையும் கல்வியையும் வளர்த்துக்கொள்வது என்கிற தீவிர உறுதிக்கு மாறிய ஸோலுவை தாயின் தற்கொலை பெரும் அதிர்ச்சிக்குள் தள்ளியது.

மற்றெவரைவிடத் தகுதியிருந்தும் - பணிக் காலத்தில் நேர்ந்த கொடுமைகள் - எங்கும் நிராகரிக்கப்பட்ட அவலம் - ஸோலுவை உலுக்கியது.

கல்வித் தகுதி வேலை வாய்ப்புகளை வாரித் தந்தது . ஆனால் பணியிடங்களில் சந்திக்க நேர்ந்த அவமானங்கள் நாள்களை கண்ணீரால் மூழ்கடித்தது.

"வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிப் போனேன். சிலவருடங்கள் கழித்து யோசிக்கலாம் என்று முடிவு செய்திருந்தவேளையில்தான், மதுரை அரசுப் பள்ளிகளில் எனக்கான வேலைவாய்ப்பு இருப்பதை அறிந்தேன். பாதுகாப்பான அந்த அரசாங்க வேலையும், குழந்தைகளிடையே பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு நல்ல தேர்வாகத் தோன்றியது..."

இந்தநேரத்தில் ஸோலுவுக்கு உதவினார்  சமூக ஆர்வலர் பிரியா பாபு. அவரது உதவியுடன், மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து அந்த வேலையில் தன்னை இணைத்துக்கொண்டார் ஸோலு.

இப்போது நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு சேவையாற்றுகிற ஒரு மருத்துவராக - சமூக ஆர்வலராக பரிணமித்திருக்கிற ஸோலு, மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்விமூலம் மருத்துவமனை நிர்வாகம் பயின்றுவருகிறார் . பிஹெச்டி அவரது அடுத்த கனவு.

"கல்வி ஒன்றே திருநங்கைகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும். அதுவே அவர்களுக்கான சிறந்த நம்பிக்கை" என்று சொல்லும் ஸோலு போன்ற திருநங்கைகள்தாம் -

'ஆடிப்பாடிப் பிச்சையெடுக்கத்தான் லாயக்கு' என்று இழிமொழி பேசி அவமானப்படுத்தும் இந்த சமூகத்தின் போக்கை உடைத்தெறிந்து புதியப் பாதையை வகுக்கிறார்கள்.

click me!