எம்.எல்.ஏ. கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நெல்லையில் 2017-ம் ஆண்டு பூலித்தேவன் பிறந்தநாளில் நடந்த மோதல் தொடர்பாக முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ. கருணாசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. நெல்லையில் 2017-ம் ஆண்டு பூலித்தேவன் பிறந்தநாளில் நடந்த மோதல் தொடர்பாக முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டின் மீது நுங்கம்பாக்கம் போலீசார் கருணாசை அதிரடியாக கைது செய்தனர்.
இதன்பின்னர் சேப்பாக்கம் போராட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். இந்த 2 வழக்குகளிலும் கருணாஸ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தினமும் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையங்களில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த நிலையில் புளியங்குடியில் கடந்த 2017-ம் ஆண்டு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரின் கார் உடைக்கப்பட்ட வழக்கில் கருணாசை கைது செய்ய புளியங்குடி போலீசார் கடந்த வாரம் சென்னை வந்தனர். சாலிகிராமத்தில் உள்ள கருணாசின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் இங்கு இல்லை. இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு கருணாஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது 8-ம் தேதிக்கு முன்ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாஸ்க்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.