
வேதங்களுக்கு இணையானது திருக்குறள் என்றும், கடந்த காலம் முதல் தற்காலம் வரை மக்களுடன் பொருந்தக் கூடிய ஒன்று திருக்குறள் என்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை 156 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு கவர்னர் தங்குவதற்கான மாளிகை,குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிநாட்டு தலைவர்கள் வந்தால் அதற்காக பிரத்யேக மாளிகை, அவற்றைச் சுற்றி பச்சைப் போர்வை போர்த்தியது போல் புல் வெளிகள் அமைந்துள்ளன.
இத்தகைய சிறப்பம்சம் கொண்ட சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திருவள்ளுவர் சிலையை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் திறந்து வைத்தார்.
பின்னர், பேசிய அவர், வேதங்களுக்கு இணையானது திருக்குறள் என்றும், கடந்த காலம் முதல் தற்காலம் வரை மக்களுடன் பொருந்தக் கூடிய ஒன்று திருக்குறள் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருக்குறள் உலக கலாச்சார பொக்கிஷமாக உள்ளது என்றும், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், திருக்குறள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் திருக்குறளின் பயனை அனைத்து மக்களும் பெறுவார்கள் என்றும் கேட்டு கொண்டார்.
கவர்னர் மாளிகை அலுவலர் நுழைவாயிலில் அவ்வையார் சிலை விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்படுவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.