
தமிழகத்தில் கல்வி நிலை
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கட்டணமில்லா கல்வியானது வழங்கப்படுகிறது. மேலும் வேறு எந்த துறைக்கும் இல்லாத வகையில் பள்ளிக் கல்விக்கு மட்டும் இந்த ஆண்டு 44,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி மாணவர்களிடம் தரமான கல்வி இல்லையென தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி பாடங்களை படிக்க தெரியாத நிலை நீடிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில். 2024 ஆம் ஆண்டிற்கான ஆண்டு கல்வி நிலவர அறிக்கை (Annual Status of Education Report, 2024 Survey) வெளியிடப்பட்டு இருக்கிறது.
மாணவர்களின் கல்வி திறன்
இந்த ஆய்வு தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் மூன்று வயது முதல் 16 வயது வரையிலான 28,984 கிராமப்புற மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், 35 விழுக்காடு எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க முடியவில்லை என்றும், 64 விழுக்காடு ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களால் இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
மேலும், 12 விழுக்காடு மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவியர் மட்டுமே இரண்டாம் வகுப்பு பாடங்களை படிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கை கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் வாசிப்பு திறன்
அதே நேரத்தில் கைபேசி மூலமான, அதாவது ஸ்மார்ட் போன் மூலமான டிஜிட்டல் கல்வியறிவில் தேசிய அளவுக்கு நிகராக தமிழக மாணவ, மாணவியர் இருக்கின்றனர் என்றாலும், கல்விக்காக இதனை பயன்படுத்துவதில் பின்தங்கி இருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், வாசிப்புத் திறனில், அரசுப் பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் தொடர் முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இந்த நிலைமைக்குக் காரணம், ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது முறையாக நிரப்பப்படாததும், ஆயிரக்கணக்கான பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதும், சம வேலைக்கு சம ஊதியம் அளிக்காததும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
காலிப்பணியிடங்களை நிரப்புக
இவற்றை தி.மு.க. அரசு நிறைவேற்றியிருந்தால், தமிழகம் இன்று கல்வியில், வாசிப்புத் தன்மையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருந்திருக்கும். தற்போதைய அவல நிலைமைக்குக் காரணம் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு, நிர்வாகத் திறமையின்மை, மெத்தனப் போக்கு ஆகியவைதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் காலியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக அமர்த்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.