
விழுப்புரம்
திமுகவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் காவலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சரை சந்தித்து பேச நேற்று சென்னை தலைமை செயலகத்திற்கு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது, மு.க.ஸ்டாலினை சந்திக்க முதலமைச்சர் நேரம் ஒதுக்கவில்லையாம். இதனால் முதலமைச்சர் அறை முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தலைமை செயலகத்தின் வெளியே வந்த அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். உடனே காவலாளர்கள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.
இதனைக் கண்டித்தும், உடனடியாக மு.க.ஸ்டாலினை விடுவிக்கக் கோரியும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் நகர தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர். உடனே விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர்கள் காமராஜ், ராபின்சன் மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர்.