
வேலூர்
வேலூரில், சுடுகாட்டை ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மண்டை ஓடுகளை கழுத்தில் அணிந்துகொண்டும், எலும்புகளை கையில் ஏந்திக்கொண்டும் ஜமாபந்தியில் மக்கள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டம், ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்து, ஆற்காடு தாலுகாவிற்கு உட்பட்ட திமிரி, கலவை, மாம்பாக்கம், ஆற்காடு, புதுப்பாடி ஆகிய உள்வட்டங்களை சேர்ந்த மக்களிடம் மனுக்களை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நேற்று திமிரி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தியானம் கிராமத்தைச் சேர்ந்த திமிரி கிழக்கு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் முருகன் கழுத்தில் மண்டை ஓடு அணிந்தும், கையில் எலும்பு துண்டுகளுடனும் கிராம மக்கள் சிலருடன் தாலுகா அலுவலகம் முன்பு கூடி முழக்கமிட்டனர்.
பின்னர் அவர், மாவட்ட ஆட்சியேரைச் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில், "அத்தியானம் கிராமத்தில் ஒரு பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட சுடுகாடு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.
தற்போது சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 20 சென்ட் மட்டுமே உள்ளது. சுடுகாடு பாதை இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி சுடுகாட்டு பாதையை சிமெண்டு சாலையாக அமைக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.