
வாழைமரம், தோரணம், மகிழ்ச்சி, ஆரவாரம் இவை எதுவுமே இல்லாமலும், திருமண மண்டபத்தை வெளியே பூட்டி விட்டும் மண்டபத்துக்கு உள்ளே, அதாவது வெளியில் இருக்கும் ஒருவருக்குகூட தெரியாத வண்ணம் திருமண விழாக்கள் விழாக்கள் தூத்துக்குடியில் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய பேரணியின்போது, போலீசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. பல்வேறு வாகனங்கள், ஆட்சியர் அலுவலகம் சூறை என பல்வேறு கலவரங்கள் நடந்த நிலையில், போலீசார் துப்பாக்கிசூடு நடத்தினர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர்.
போலீசாரின் துப்பாக்கிசூட்டைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவம் தூத்துக்குடி வந்துள்ளது. போலீசாரின் அத்துமீறல் எல்லையை மீறி உள்ளது என்று தூத்துக்குடி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆட்சியராக பதவியேற்ற சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடியில் அமைதியை நிலை நாட்டுவதே முதல் வேலை. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். யாரும் காவல்துறைக்கு அஞ்ச வேண்டாம் என்றும் வியாபாரிகள் கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆட்சியரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தூத்துக்குடியில் சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பேருந்துகள், ஆட்டோ, மினி வேன்கள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பால் போன்றவை மட்டுமே கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. காய்கறிகளின் விலை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போயுள்ளனர்.
தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளைக்கூட வெளியில் பூட்டி வைத்து விட்டு நடத்தி வருகின்றனர். சில இடங்களில் திருமண மண்டபங்கள் வெளியில் பூட்டப்பட்டுள்ளன. ஆனால், திருமண மண்டபத்துக்குள் திருமணம் நடைபெற்றது. இதனால் உறவினர்கள் அங்கிருக்கும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிலை உள்ளது. தூத்துக்குடி அருகில் இருக்கும் உறவினர்கள் யாரும் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாமல் நடைபெற்று வருகிறது. தோரணங்கள், மகிழ்ச்சி, கலகலப்பு என திருமண கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.