
திண்டுக்கல் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் உட்பட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளை கொண்டது. இந்த மாநகராட்ச்சிக்கு ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு முதல் பருவ மழை பொய்த்ததன் காரணமாக காமராஜர் நீர்தேக்கத்தில் குறைந்த அளவு தண்ணீரே தேங்கி உள்ளது.
இந்நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வரும் குடிநீரும் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீரே விநியோகம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி 100 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் திண்டுக்கல் மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிதத்தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.