
விழுப்புரம்
விழுப்புரத்தில் உள்ள அரசு மணல் குவாரியில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகத்தில் மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில், "திருக்கோவிலூர் வடக்கு நெமிலி பகுதியில் அரசின் மணல் குவாரி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு லாரிகளுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது.
மாட்டு வண்டித் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்று, அந்த குவாரியில் மாட்டு வண்டிகளுக்கும் மணல் வழங்கி வந்தனர்.
இங்கிருந்து வடக்கு நெமிலி, ஆவிக்குளம், காட்டுப்பையூர், எடப்பாளையம், மருதூர், சித்தலிங்கமடம், சைலோம், கச்சிக்குப்பம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இயங்கும் 460 மாட்டு வண்டிகள் மணல் எடுத்து வந்து கிராமப் புறங்களில் வீடு கட்டும் பணிக்கு வழங்கி வந்தன. அரசு தொகுப்பு வீடு கட்டும் திட்டத்துக்கும் மணல் வழங்கி வந்தோம்.
இந்த நிலையில், கடந்த பத்து நாளுக்கு முன்பு மாட்டு வண்டிகளுக்கு மட்டும் மணல் வழங்கியதை திடீரென நிறுத்திவிட்டனர். இதனால், மாட்டு வண்டித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் ஏழை மக்களும் மணலின்றி கட்டுமானப் பணிகள் நடக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் வடக்கு நெமிலி மணல் குவாரியில் மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்க வேண்டும்" என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர்.