
விழுப்புரம்
அரசு குவாரியில் மணல் வழங்காததைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட லாரி ஓட்டுநர்களை காவலாளர்கள் விரட்டியடித்தனர். மறியலால் அரை மனிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.
விழுப்புரம் மாவட்டம், பிடாகம் அருகே சித்தாத்தூர் பகுதி தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி ஒன்று உள்ளது. இங்கு, ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் லாரிகளுக்கு மணல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட 500-க்கும் மேற்பட்ட லாரிகள் அரசூர், பாரதிநகர் பகுதியில் உள்ள திடலில் நிறுத்தி வைக்கப்பட்டு, வரிசையாக குவாரிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
பதிவு செய்யப்பட்ட லாரிகளுக்கு அன்றே மணல் வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், முன்பதிவு செய்த லாரி ஓட்டுநர்கள் அரசூர் பகுதியில் கடந்த நான்கு நாள்களாக இரவு, பகலாக மழை, வெயிலில் காத்திருந்தும் மணல் தரப்படவில்லை.
இதனால் சினம் கொண்ட லாரி ஓட்டுநர்கள் அரசூர் பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெண்ணெய்நல்லூர் காவலாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.