
அரியலூர்
முடிகொண்டான் - சேனாபதி இடையே புதிதாக போடப்பட்ட சாலை மூன்று மாதங்களில் பெயர்ந்து வந்ததால் மக்கள் எரிச்சல் அடைந்தனர். சாலையை சீரமைத்துத் தரக் கோரி ஜனவரி 31-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழுக் கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச்செயலாளர் கலியபொருமாள் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பன்னீர் செல்வம், பரிசுத்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்துப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், "சேனாபதி இடுகாட்டுக்குச் செல்லும் பாதை தனியார் இடத்தில் உள்ளதால், அவர்கள் அவ்வப்போது பூட்டி விடுகின்றனர். எனவே, அந்த இடத்தை அரசு கைப்பற்ற வேண்டும்.
நூறு நாள் வேலையைத் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும்,
முடிகொண்டான் - சேனாபதி சாலை போடப்பட்ட மூன்று மாதங்களில் முற்றிலும் பெயர்ந்து வந்துவிட்டது. இதனால், இப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மேலும், பெரும் சிரமத்தையும் எதிர்கொள்கின்றனர்.
எனவே, சாலையை சீரமைத்துத் தரக் கோரி ஜனவரி 31-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.