
அரியலூர்
அரியலூரில் உள்ள பஞ்சு மில்லில் தீ விபத்து ஏற்பட்டதில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. இந்த பஞ்சு மில்லில் தீ விபத்து இரண்டவாது முறையாக ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்துள்ள பொய்யூர் இடையத்தான்குடி பிரிவு சாலையில் அழகுதுரை (55) என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது.
இந்த பஞ்சு மில்லில் நேற்று மாலை மின் மோட்டார் சூடாகி மின் வயர்கள் எரிந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, சில மின் மோட்டார்களும் அருகிலுள்ள பஞ்சு மூட்டைகளும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் உபகரணங்கள் மூலம் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து அரியலூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.