எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கும் செங்கோட்டையன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்புக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
Sengottaiyan Met Amit Shah in Delhi: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆளும் கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக, விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என அனைத்து கட்சிகளும் தேர்தல் கணக்கை போடத்தொடங்கி விட்டன. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் கூட்டணி குறித்து ஏதும் பேசவில்லை. தமிழ்நாடு சட்ட ஒழுங்கு மோசமான நிலை குறித்து தான் அமித்ஷாவிடம் பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தாலும் இருவரும் கூட்டணி குறித்தும், சீட் பகிர்வு குறித்தும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், அமித்ஷாவையும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பாம்பும் கீரியுமாக எடப்பாடி பழனிசாமி-செங்கோட்டையன்
அண்மை காலமாக செங்கோட்டையனும், எடப்பாடி பழனிசாமியும் கீரியும் பாம்புமாக இருந்து வருவது அனைவருக்கும் தெரியும். எஸ்பி வேலுமணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை செங்கோட்டையனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுக்காததே இருவருக்கும் இடையே புகைச்சல் ஏற்பட காரணம் என தகவல்கள் கூறின. இந்த நிலையில் தான் டெல்லியில் நிர்மலா சீதாராமனையும், அமித்ஷாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசியது அரசியல் களத்தில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா நிபந்தனை
இந்த ரகசிய சந்திப்புக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது கூட்டணி தொடர்பாக சில நிபந்தனைகளை பாஜக முன்வைத்ததாக கூறப்படுகிறது. அதில் முதலாவது பாஜகவுக்கு அதிக சீட்களும், அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும். இரண்டாவது அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பதாகும்.
இபிஎஸ்-ஐ தொடர்ந்து செங்கோட்டையன் திடீர் டெல்லி பயணம்! யாரை சந்தித்தார் தெரியுமா?
செங்கோட்டையனிடம் அமித்ஷா பேசியது என்ன?
அமித்ஷாவின் இந்த நிபந்தனைகளுக்கு எடப்பாடி பழனிசாமி தலையசைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாற்று வழி குறித்து யோசித்த அமித்ஷா உடனே செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாட்டில் திமுகவுக்கு இருக்கும் பலம், பலவீனம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை, அதிமுகவின் இப்போதைய நிலை ஆகியவை குறித்து செங்கோட்டையனிடம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
எஸ்பி வேலுமணி, தங்கமணிக்கு செல்வாக்கு அதிகம்
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருந்தாலும், எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார் என முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு இருந்து வருகிறது. இதில் எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையனுக்கு கொங்கு பகுதிகளில் அசைக்க முடியாத செல்வாக்கு உள்ளது.
அமித்ஷாவின் பிளான்
மேலும் மேற்கண்ட அனைவரும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை பெரிதும் விரும்புகின்றனர். உதயகுமார் ஒருபடி மேலே போய் அமித்ஷாவை இரும்பு மனிதர் என்றே கூறி விட்டார். அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவியை தவிர எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் பெரிய ஆதரவு இல்லை என்பதை புரிந்து கொண்ட அமித்ஷா, இப்போது செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை கட்டமைக்க பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செங்கோட்டையன் தலைமையில் அதிமுக?
அதிகார போட்டியின் காரணமாகத் தான் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நிற்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என விரும்புகிறார். ஓபிஎஸ் போல் தர்ம யுத்தம் நடத்தினால் ஒரு பயனும் இல்லை என்பதை அறிந்து கொண்ட அவர் அதிமுகவை கைப்பற்ற இப்போது பாஜக உதவியை நாடியுள்ளார் எனவும் இதற்காகவே காத்திருந்த அமித்ஷா செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை உருவாக்க பிளான் போட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகன் அதிமுக உள்ளே...
அதாவது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களில் சுமார் 90% பேர் பாஜக கூட்டணியை விரும்புகின்றனர். ஆகவே செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு எஸ்பி வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். இதன்மூலம் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரனையும் அதிமுக உள்ளே கொண்டு வந்து விடலாம் என்பதே அமித்ஷாவின் கணக்காக உள்ளது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
செங்கோட்டையனுக்கு வலைவீசிய அமித்ஷா
செங்கோட்டையனுக்கு அவர் விரும்பிய பதவி கிடைக்கும் என்பதால் பாஜகவின் நிபந்தனைகளை அவர் எந்தவித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார். மேலும் சசிகலாவின் தீவிர விசுவாசியான செங்கோட்டையன் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவின் உள்ளே வருவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். சட்டப்பேரவையில் அவர் ஓபிஎஸ்ஸுடன் மிக நெருக்கமாக உட்கார்ந்து இருந்ததை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடி
அமித்ஷாவின் இந்த கணக்கு இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கூட்டணி தொடர்பாக பாஜகவின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் பிரிந்து கிடந்தால் வாக்குகளும் பிரிந்து அது திமுகவுக்கு தான் சாதகமாக முடியும் என அமித்ஷா நினைக்கிறார்.
செங்கோட்டையனின் ஆசை நிறைவேறுமா?
இதனால் தான் பாஜக, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி உள்பட அனைவரும் அடங்கிய அதிமுக, அன்புமணியின் பாமக, ஜிகே வாசனின் தமாகா, ஜான் பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோர் அடங்கிய மெகா கூட்டணி அமைத்து திமுகவை எளிதில் சாய்த்து விடலாம் என அமித்ஷா கணக்கு போடுகிறார். இதை வைத்தே அமித்ஷா எடப்பாடி பழனிசாமிக்கு நிபந்தனை விதித்துள்ளார். அவர் இதற்கு ஒத்துவராத பட்சத்தில் செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவை அமைத்து பிளானை செயல்படுத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமித்ஷாவின் இந்த பிளான் செல்லுபடியாகுமா? செங்கோட்டையனின் ஆசை நிறைவேறுமா? எடப்பாடி பழனிசாமி என்ன செய்ய போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராக யார் வரணும்? சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்!