
பல இலட்ச ரூபாய் வருமானம் தரும் ஊட்டி – கோத்தகிரி சாலையில் இருந்து தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையை தரமான முறையில் சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று ஊட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சங்கர் தலைமை வகித்தார்.
இதில் வீட்டுமனை பட்டா, குடிநீர், நடைபாதை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
இந்த கூட்டத்தில் ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில், “ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த காட்சிமுனை பகுதிக்குச் செல்ல ஊட்டி – கோத்தகிரி சாலையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணமும் வசூலிக்கப்படுவதன்மூலம் பல இலட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. இந்தச் சாலையை தரமில்லாமல் சீரமைப்பதால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களும் பழுதடைகின்றன. எனவே இந்தச் சாலையை தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் அவலாஞ்சி பகுதிக்குச் செல்லும் சாலையும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த இரு சாலைகளையும் கோடை சீசன் தொடங்குவதற்கு முன்பாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் சங்கர் உத்தரவுப் பிறப்பித்தார்.