
கூடலூரில் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞர்கள் கோரிகை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேறததால் வழக்கறிஞர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஒருங்கிணைந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்படுகிறது. இங்கு சுமார் 50 வழக்கறிஞர்கள் பணியாற்றுகின்றனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாவை உள்ளடக்கி ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் கூடலூரில் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் இதுவரை சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கூடலூர் நீதிமன்றத்தில் இருந்து அனைத்து வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம், பிரதான சாலை வழியாக காந்தி திடலை வந்தடைந்தனர்.
இதனைக் கண்டித்தும், உடனடியாக ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் அமைக்கக் கோரியும் கூடலூர் காந்தி திடலில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.
இந்தப் போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள், சங்க தலைவர் மேத்யூதாமஸ் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜேக்கப்மேத்யூ, பொருளாளர் பரசுராமன், ஒருங்கிணைப்பாளர் சாக்கோ ஆகியோர் உள்பட பலர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினர்.
இந்தப் போராட்டத்தில் சங்க துணைத் தலைவர் சீனுவர்கிஷ், துணை செயலாளர் மலைச்சாமி, கோஷிபேபி, பொன்.ஜெயசீலன், முருகன், ஜெகதீசன், குமரேசன் உள்பட அனைத்து வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மேத்யூதாமஸ் மற்றும் வழக்கறிஞர்கள் கூறியது:
“கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கூடலூரில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. ஆனால், 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை நீதிமன்றம் அமைக்கப்படவில்லை.
கூடலூர், பந்தலூர் தாலுகாவில் 10 காவல் நிலையங்கள் மற்றும் 12 வனச்சரக அலுவலகங்கள் உள்ளது. ரூ.1 இலட்சத்துக்கு மேல் உள்ள சிவில் வழக்குகளுக்கு ஊட்டிக்கு செல்ல வேண்டிய நிலையுள்ளது.
பந்தலூர், கூடலூர் பகுதியில் உள்ள மக்கள் வழக்கு விசாரணைக்காக சுமார் 100 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
வனவிலங்குகள் நடமாட்டம், போதிய பேருந்து வசதி இல்லாத நிலை உள்பட பல்வேறு காரணங்களால் ஊட்டி சார்பு நீதிமன்றத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் உள்ளது.
மேலும் மழைக்காலத்தில் இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளையும் கடந்து ஊட்டிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இரண்டு தாலுகாக்களையும் உள்ளடக்கி கூடலூரில் ஒருங்கிணைந்த சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.