
இராசிபுரத்தில் வெவ்வெறு சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு, காதலால் ஒன்று சேர்ந்த எங்களை மதத்தின் பெயரால் பிரித்துவிட வேண்டாம் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகேயுள்ள ஓ.சௌதாபுரம் மணல்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலுவின் மகன் பிரபாகரன் (27). பட்டதாரியான இவர் வெண்ணந்தூர் வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள தேவராயம்பாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தஸ்தகீர். இவரது மகள் சபிதா பானு (19). இவர் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறார். இவர்களது சொந்த ஊர் வெண்ணந்தூர் அருகிலுள்ள வெள்ளைபிள்ளையார் கோவில்.
சபிதா பானு வெள்ளைபிள்ளையார் கோவிலுக்கு அடிக்கடி வந்துசெல்வது வழக்கம். பிரபாகரன் வேலை பார்க்கும் நிதி நிறுவனமும், சபிதாபானுவின் வீடும் அருகே அருகே இருப்பதால் இவர்கள் இடையே நட்பு ஏற்பட்டு, நாளடைவில் காதலாகியது.
பெற்றோருக்குத் தெரியாமல் இருவரும் நேற்று காலை ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், பெற்றோருக்கு பயந்தும் இந்த காதலர்கள் பாதுகாப்பு கோரி இராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
காதலர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ விசாரணை மேற்கொண்டார். பிறகு அங்கிருந்து வெண்ணந்தூர் காவல் நிலையத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார்.
காதலால் ஒன்று சேர்ந்த எங்களை மதத்தின் பெயரால் பிரிக்க வேண்டாம் என்ற அந்த காதலர்களின் கோரிக்கை நிறைவேறுமா?