உள்ளூர் குளத்தில் விலை மதிப்புமிக்க பச்சைக் கல் கிடைக்குதாம்; கூட்டம் கூட்டமாக வந்து பள்ளம் தோண்டும் மக்கள்…

First Published Sep 30, 2017, 10:14 AM IST
Highlights
The price of a precious green stone in the local pool Crowd gathering people


கரூர்

வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலைமதிப்புமிக்க கல் கிடைப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கல்லை தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில், கடவூர், கிருஷ்ணராயபுரம், தாந்தோன்றி ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பூமிக்கடியில் பச்சைக்கல் எனப்படும் மரகத கல் மற்றும் செவ்வந்தி கல் ஆகியவை ஆங்காங்கே பரவலாக கிடைக்கிறது. இந்த கற்கள் அதன் தூய தன்மை அளவு ஆகியவற்றைப் பொறுத்து பல இலட்சம் ரூபாய் வரை விலை போகும்.

முன்பெல்லாம் மழை பெய்து கோடை உழவு செய்த நிலங்களில் மேற்பரப்பில் ஆங்காங்கே சிறிய அளவில் இந்த வகையான கற்கள் கிடைக்கும். இதை பலரும் மெதுவாக நடந்து கொண்டே உன்னிப்பாக கவனித்து எடுத்து விற்பது வழக்கம்.

அண்மை காலங்களில் ஒரு சிலர் ஒன்றாகச் சேர்ந்து குழுவாக மானாவாரி நிலங்கள், தோட்டங்களில் அவற்றின் உரிமையாளரின் அனுமதியுடன் கிணறு போல் ஆழமாக தோண்டி அதிலிருந்து இந்த அரிய வகை கற்களை எடுத்து விற்று இலட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

இதையறிந்த வெளியூர் வணிகர்கள் இந்தப் பகுதிக்கு வந்து நிலத்தின் உரிமையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்துவிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் பல்வேறு இடங்களில் ஆழமாகவும், அகலமாகவும் தோண்டி இக்கற்களை எடுத்துச் செல்கின்றனர். சிலர் இலட்சக்கணக்கில் செலவு செய்தும் ஏமாற்றம் அடைகின்றனர்.

இவ்வாறு மரகத, செவ்வந்தி கற்களுக்காக பள்ளம் தோண்டும்போது வெளியூர் நபர்களுக்கும், உள்ளூரைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும். இதனால் சட்டம் – ஒழுங்கு பாதிப்படைந்து ஏராளமான வழக்குகளும் பதிவுச் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தற்போது சுமார் 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட வெள்ளியணை பெரியகுளத்தில் வளர்ந்திருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு அரசின் அனுமதியுடன் விவசாயிகள் சௌடு மண் எடுத்துச் செல்வதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்ப் பள்ளங்களில் பச்சைக் கல் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் கடந்த சில நாள்களாக கடப்பாரை, மண் வெட்டி ஆகியவற்றை எடுத்துச் சென்று கும்பல், கும்பலாக குளத்தில் பள்ளம் தோண்டி வருகின்றனர்.

இதில், சிலர் பச்சைக் கற்களை எடுத்துவிட்டதாலும், தங்களுக்கும் அது கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் பலரும் குளத்தில் பள்ளம் தோண்டி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

tags
click me!