மக்கள் நாயகனாக விளங்கும் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை.. டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு..

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 5:47 PM IST
Highlights

பிரபல ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை நேரில் அழைத்து, டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டினார். தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருவதாக வாழ்த்தும் தெரிவித்தார். 
 

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை என்பவர் தன்னுடைய ஆட்டோவில்  இலவச வை-பை, நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி, என பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். பணம் செலுத்த முடியாதவர்களுக்கு ஸ்வைப்பிங் மிஷன் வசதி ஏற்படுத்தியுள்ளார். அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய சிறப்பு தினங்களின்போது தள்ளுபடி விலையில் சவாரி என பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி பயணிகளை கவர்ந்து வருகிறார்.

ஒருமுறை அண்ணாதுரை ஆட்டோவில் பயணம் செய்தவர்கள், நிச்சயம் அடுத்த முறை அவரது ஆட்டோவுக்காக காத்திருந்து பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் அளவுக்கு, ஒரே சவாரியில் வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்துவிடுவதே அண்ணாதுரையின் சிறப்பு என்று கூறப்படுகிறது. இதனால் வாடிக்கையாளரைக் கவர்வது எப்படியென இந்திய அளவில் பல மேடைகளில் பேச அண்ணாதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. உலகின் முன்னணி நிறுவனங்களான, மைக்ரோசாப்ட், கூகுள், எச்.பி என 300க்கும் மேற்பட்ட நிறுவங்களின் கருத்தரங்கில் பங்கேற்று தனது யோசனைகளை முன்வைத்துள்ளார்.

ஆட்டோ ஓட்டும் பணிக்கு விரும்பி வரவில்லை எனினும், கிடைத்த வேலையை பிடித்த மாதிரி விரும்பி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயங்கி வருவதாக கூறுகிறார் அண்ணாதுரை. ஆட்டோவில் பல்வேறு வசதிகளை வழங்கும் அண்ணாதுரை சவாரி கட்டணமாக மற்ற ஆட்டோவில் வசூலிக்கப்படும் அதே அளவிலான கட்டணமே வாங்குகிறார் என்பது தான் இதில் ஹைலைட்.இவை அனைத்திற்கும் மேலாக, இவரது ஆட்டோவில் எப்போதும் ஆசிரியர்கள் இலவசமாக சவாரி மேற்கொள்ளலாம். கொரோனா பரவலுக்கு பின்னர் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் மூன்று துறையை சேர்ந்தவர்களுக்கும் ஆட்டோவில் கட்டணம் கிடையாது என்று அறிவித்துள்ளார். 

இந்நிலையில் சமீபத்தில் அண்ணாதுரை குறித்து தனியார் ஊடகம் வெளியிட்ட வீடியோவை பார்த்த மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரை புகழ்ந்து தள்ளினார்.அண்ணாதுரையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எம்.பி.ஏ மாணவர்கள் இவருடன் ஒரு நாள் செலவிட்டால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர் என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் தற்போது ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை நேரில் அழைத்து, டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வரும் அண்ணாதுரை, தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
 

click me!