
சிவகங்கை
ஜனநாயக முறையில் தனது கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது பொய் வழக்குபோடுவதை காவல்துறை கைவிட வேண்டும் என்று சிவகங்கையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்தமும், நீதிமன்ற நடவடிக்கைகளும் என்றத் தலைப்பில் போராட்ட விளக்கக் கூட்டம் நடைப்பெற்றது.
சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் முருகேசன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் மண்டலச் செயலர் பேராசிரியர் குமார் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
இதில், “ஏழாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும்,
தற்போது நடைமுறையில் உள்ள புதிய தன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதை தடுக்கும் வழி முறைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் மக்களிடம் எடுத்துக் கூறும் விதமாக சுகாதார துறையுடன் ஜாக்டோ ஜியோ உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்றும்,
ஜனநாயக முறையில் தனது கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது பொய் வழக்கு போடுவதை காவல்துறை கைவிட வேண்டும்,
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.