
சேலம்
சேலத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தனர். தங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சலால் தொடர் உயிரிழப்பு ஏற்படுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி வருகிறது. டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கவும், புழுக்கள் உற்பத்தியாவதை கட்டுப்படுத்தவும் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகிறது. ஆனால், மாறிவரும் பருவநிலை மற்றும் தொடர்மழை காரணமாக கொசுக்களை ஒழிப்பது சிரமம் என்பதே நிதர்சணம்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
அதேபோல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவோரும் அதிகளவில் உள்ளனர். இதுவரை சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 20 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும், மர்ம காய்ச்சலால் 30-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமியும், சிறுவனும் நேற்று பலியானார்கள். சேலன் ஜான்சன்பேட்டை கோர்ட்டு சாலை காலனி பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் - சத்யவாணி தம்பதியின் 11 வயது மகள் ரக்ஷிதா. இவள், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ரக்ஷிதாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவளுக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரக்ஷிதா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.
ஏற்கன்வே இந்தப் பகுதியில் ஸ்ரீதரன், தானேஸ்வரன் ஆகிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரக்ஷிதா உயிரிழந்துள்ளார். இப்படி தொடர் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதேபோன்று, சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஞானசேகரன். இவருடைய மகன் சக்திவேல் (12). அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் சக்திவேல் 6-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அவனை, சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சக்திவேலுக்கு டெங்கு அறிகுறி இருப்பது உறுதியானது. தொடர் சிகிச்சையில் இருந்துவந்த சக்திவேல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.
இப்படி டெங்கு காய்ச்சலால் தங்கள் பகுதியிலும், பிற பகுதியிலும் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.