மாவட்டத்திற்கு தேவையான பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு வேண்டும் – அமைச்சர் வேண்டுகோள்….

First Published Oct 10, 2017, 7:42 AM IST
Highlights
The authorities need to cooperate to speed up the work needed for the district - Minister request ....


இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேவையான நிதிகளை பெற்றுக் கொடுக்கும்போது, பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.மு.மணிகண்டன் பேசினார்.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிகணினிக்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமைத் தாங்கினார். விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்டக் கல்வி அலுவலர் கோ.முத்துச்சாமி, ராம்கோ  அவைத் தலைவர் செ.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின்  தலைவர்  பி.ஜெயஜோதி  ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்.

இதில், தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.மு.மணிகண்டன் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மடிகணினிக்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியது: “கல்வி வளர்ச்சிதான் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பதை நன்கு அறிந்துதான் கல்வித்துறைக்கு அதிகளவில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. 14 வகையான மாணவர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பொருளாதாரத்தில் உயர்வாக இருப்பவர்கள் மட்டுமே மடிகணினிக்களை பயன்படுத்த முடியும் என்ற சூழலை மாற்றி ஏழை, எளியவர்களும் மடிக்கணினியை பயன்படுத்த விலையில்லா மடிக்கணினிக்கள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அமைச்சர் என்ற முறையில் நான் முதல்வரை சந்தித்து மாவட்டத்திற்கு தேவையான நிதிகளை பெற்றுக் கொடுக்கும்போது, பணிகளை வேகமாக முடிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். இராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகளில் சாலைகள் அனைத்தும் விரைவாக செப்பனிடப்பட வேண்டும்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 778 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது. இராமநாதபுரம் வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1688 பேர், திருப்புல்லாணி  வட்டார அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1043 பேர், மண்டபம் வட்டார அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1447 பேர் உட்பட மொத்தம் 4178 பேருக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 26 இலட்சத்து 28 ஆயிரத்து 220 ஆகும்.

மடிகணினி பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர்கள் அனைவரும் அதை நல்ல முறையில் பயன்படுத்தி உலகளாவிய அறிவைப் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்” என்று அமைச்சர் பேசினார்.

பல்வேறு பள்ளிகளின் தலைமை  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

click me!