
கிருஷ்ணகிரி
விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியர் தெரிவித்ததையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமைத் தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பசுமைக் குடில் இழப்பு, காட்டுப் பன்றிகளால் நிலக்கடை பயிர் பாதிப்பு, இலகு இயந்திரங்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் விவாதித்தனர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், “உரம், பூச்சி மருந்துகளின் போலித் தன்மையை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்தூரிலிருந்து வேலம்பட்டி வழியாக காவேரிப்பட்டணத்திற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படும்.
வேளாண்மைத் தொடர்பாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகள் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊத்தங்கரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு காராமணி, உளுந்து விதை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் நரசிம்மன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கணேசன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.