
குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக போக்க “பம்பை அச்சன்கோவில் அணைத் திட்டம்” உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நகரப்பகுதி, கிராமப்பகுதி என அனைத்து இடங்களிலும் கோடைகாலம் தொடங்கும் முன்பே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிராமங்களுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட ஆதாரமான ஆறுகள் வறண்டதால் குடிநீர் பிரச்சனை மாவட்ட நிர்வாகத்துக்கு தலைவலியாக மாறியது.
சீராக குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.
பருவ மழை மூன்று ஆண்டுகளாக பொய்த்துப் போனதால் நகரப்பகுதி, கிராமங்களில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கிறது. சில இடங்களில் குடிநீர் சப்ளை இருந்தும் போதுமானதாக இல்லை.
நகராட்சி மற்றும் பேரூராட்சி அருகே உள்ள கிராமங்களில் புதிய குடியிருப்புகள் உருவாகின்றன. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது.
நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள வரி விதிப்புகளை விட கிராமங்களில் குறைவாக உள்ளதால் இங்கு குடியிருப்பு வீடுகள் அதிகரிக்கிறது.
தொழில் தொடங்க நினைப்பவர்கள் அதற்கேற்ற இடவசதி கிராமங்களில் கிடைக்கும் என்பதால் சிறு தொழிற்சாலைகளை அங்கு அமைக்கின்றனர். இதைச் சுற்றி ஊழியர்கள் குடியிருப்புகள் உருவாகின்றன.
குறிப்பிட்ட கிராமத்தின் மக்கள் தொகை கணிசமாக உயரும் போது அதற்கேற்ற குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் திருப்திகரமாக இல்லை.
இதுபோன்ற காரணங்களால் கிராமங்களில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கிறது.
இந்த கிராமங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்திச் செய்ய மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுகிறது.
ஆறுகளில் பல இடங்களில் மணல் திருட்டால் ஆழ்துளை குழாய்கள் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
கோடை காலம் துவங்கும் முன்பே கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பல கி.மீ தூரம் நிலத்தடியில் பைப்லைன் அமைத்து சப்ளை நடக்கிறது. பல கிராமங்களை தாண்டி வரும்போது குறைந்த அளவே தண்ணீர் வருகிறது.
சாலை அகலப்படுத்தும் பணியின் போது பைப்லைன் சேதமாகி குடிநீர் வீணாகிறது. குடிநீர் வாரியத்தில் ஆள் பற்றாக்குறையால் இதை சரிசெய்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதனாலும் பல கிராமங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கிறது.
நகராட்சி பகுதிகளில் சராசரியாக 20 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை நடக்கிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே இந்த நிலையால் மக்கள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க நகர செயலாளர் முருகேசன் கூறியதாவது;–
வறட்சியை சமாளிக்க நகர் பகுதியில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தை முறையாக நிறைவேற்ற வேண்டும்.
தென்மேற்கு பருவமழையின் போது கேரளாவில் பெய்யக்கூடிய மழையினால் பம்பை ஆற்று நீர் அரபிக்கடலில் வீணாக செல்கிறது.
இந்த நீரை வீணாக்காமல் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயனடையச் செய்ய 20 ஆண்டிற்கு முன்பு சிவகாசி எம்.எல்.ஏ.வாக சொக்கர் இருந்த போது பம்பை அச்சன்கோவில் அணைத் திட்டம் மூலம் சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமும், விவசாய நீர் பாசன வசதிகள் செய்து கொடுக்க தமிழக, கேரள ஆகிய இரு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்தார்.
மத்திய மந்திரிகளிடமும் மாநில அமைச்சர்களிடமும் மனு கொடுத்து முயற்சி செய்தார்.
இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் உள்ளது. அதன் பிறகு எந்த சட்டமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினரும் இது சம்பந்தமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் தான் கடுமையான வறட்சியால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே, இத்திட்டத்தை செயல்படுத்த சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து பம்பை அச்சன்கோவில் அணைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இதனால் வறட்சியில்லாமல் நிலத்தடி நீர் உயரும், குடிநீர் பஞ்சம் இல்லாமல் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.