ரூ.300 கோடி ஒதுக்கியும் ஏரிகள் சரியாக தூர்வாரப்படவில்லை – எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு…

First Published Oct 20, 2017, 9:02 AM IST
Highlights
The lakes are not properly distributed to the Rs 300 crore allocated - MLA thrust accusation ...


திருவண்ணாமலை

தமிழகத்தில் ஏரிகளைத் தூர்வார அரசு சார்பில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டும் திருவண்ணாமலையில் உள்ள ஏரிகள் சரிவர தூர்வாரப்படவில்லை என்று எ.வ.வேலு எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து இரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாத்தனூர் அணையையும், ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதையும் எ.வ.வேலு எம்எல்ஏ நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து, “சாத்தனூர் அணையில் துருப்பிடித்த நிலையில் உள்ள மின்சாதனங்களை மாற்ற வேண்டும்.

இங்குள்ள உணவகத்தை தரமாக மாற்ற வேண்டும்.

செயல்படாமல் முடங்கியுள்ள படகு குழாமை மீண்டும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

குழந்தைகள் பூங்காக்களில் உள்ள விளையாட்டுப் பொருள்களை சரிசெய்ய வேண்டும்.

சுற்றுலா வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு எ.வ.வேலு எம்எல்ஏ ஆலோசனைகளை கொடுத்தார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 963 ஏரிகள் உள்ளன. தமிழகத்தில் ஏரிகளைத் தூர்வார அரசு சார்பில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனாலும், ஏரிகளை சரிவர தூர்வாராததால் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போனது.

சாத்தனூர் அணையில் 8100 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால், அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 119 அடியில் 25 அடி உயரத்துக்கு சேறு நிரம்பியுள்ளதால், வெறும் 7300 மில்லியன் கன அடி தண்ணீரை மட்டுமே சேமித்து வைக்க முடிகிறது.

அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் செல்லும் வலது, இடதுபுறக் கால்வாய்கள் மூலம் 86 ஏரிகள் நிரம்பி இருக்க வேண்டும். ஆனால், ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களில் முள் செடிகள், மண்மேடுகள் அதிகம் இருப்பதால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை” என்று குற்றம் சாட்டினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்டத் துணைச் செயலர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, நகரச் செயலர் ப.கார்த்திவேல்மாறன், மருத்துவர் எ.வ.வே.கம்பன், சாத்தனூர் அணை நீர்ப்பாசன சங்கத் தலைவர் ஜெயராமன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

click me!