வெள்ளத்தில் சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற 'சடலம்'... தொடர்மழையால் கரூரில் ஏற்பட்ட அவலம் !

By Raghupati RFirst Published Nov 28, 2021, 11:35 AM IST
Highlights

4 அடிக்கும் மேலான மழைநீர் வெள்ளத்தில் சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம், கல்லடை ஊராட்சி, கரையாம்பட்டி வடக்கு தெருவில் 15 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லடை குளத்திலிருந்து உபரிநீர் செல்லக்கூடிய வடிகால் வழியாக ஒரு கிலோமீட்டர் தொலைவில் சென்று தான் இறந்தவர்களை அடக்கம் செய்து வந்துள்ளனர். அவர்கள் ஊருக்கென தனியாக சுடுகாடு இல்லை.

தற்போது பெய்து வரும் தொடர்மழையால் கல்லடை குளம் நீர் நிரம்பி வழிந்தோடி செல்கிறது. இந்நிலையில் கரையாம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த தம்பிரான் என்பவரின் மனைவி அரியநாச்சி  வயது முதிர்வு காரணமாக நேற்று  உயிரிழந்தார்.. இவருக்கு வயது 80 ஆகிறது. இந்நிலையில் இறந்தவரின் உடலை சுடுகாடு பகுதிக்கு எடுத்துச்செல்ல உரியபாதை இல்லாமல் ஒரு கிலோமீட்டர் வரை உபரிநீர் செல்லும் வாய்க்காலில் 4 அடி ஆழத்தில் உடலை தூக்கி கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து பேசிய மக்கள், எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்களுக்கென்று தனியாக மயானம் இல்லை. அடிப்படை வசதிகளும் எங்கள் ஊருக்கு செய்து தருவதில்லை. கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இந்த பிரச்சனை  இருந்து வருகிறது.தற்போது பெய்திருக்கும் மழையினால், இறந்தவரின் சடலத்தை 4 அடிக்கும் மேலான தண்ணீரை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது. மயானத்திற்கு செல்ல உரியபாதை மற்றும் பாலம் அமைத்து தர வேண்டும் . அரசு மற்றும் அரசியல்வாதிகள் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு’ என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

click me!