Chennai Rains : தீவாக மாறிய ‘சென்னை’ குடியிருப்புக்கள்... 'தொடர்' மழையால் அவஸ்தைப்படும் சென்னைவாசிகள்...

By Raghupati RFirst Published Nov 28, 2021, 10:53 AM IST
Highlights

தொடர் கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதனால் சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,தூத்துக்குடி என மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையே மிதக்கிறது. தமிழக அரசும் மீட்பு பணியை முடுக்கி விட்டிருக்கிறது.  வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று ட்விட்டரில் சென்னை மழை அளவினை பதிவிட்டார். கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக சென்னையில் ஒரு மாத மழைப்பொழிவு 1000 மி.மீ கடந்துள்ளது. 

1918ஆம் ஆண்டிற்குப் பிறகு 2005ல் தான் மீண்டும் 1000 மி.மீ தொட்டுள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 3 முறை இந்த நிகழ்வு நடந்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த சிலநாட்களாக சென்னையில் பெய்து வரும் மழையால், சென்னையின் பல்வேறு இடங்களில் குடியுருப்புகள், தெருக்கள், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்லமுடியாத அவல நிலையில் உள்ளனர். சென்னை மாநகர் மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். 

இதன்காரணமாக கே.கே.நகர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில் உதயம் தியேட்டர் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்க் செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் முழு வீச்சில் வெல்ல மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தி.நகர், கே.கே.நகர், மாம்பலம், மேற்கு மாம்பலம், கோயம்பேடு, வடபழனி, விருகம்பாக்கம், சாலிகிராமம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, புரசைவாக்கம், புளியந்தோப்பு, எழும்பூர், வேளச்சேரி, மேடவாக்கம், அண்ணாநகர், முகப்பேர், வேப்பேரி உள்ளிட்ட மாநகரின் அனைத்து இடங்களிலும், புறநகர் பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழையால் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் அதிகளவில் தேங்கி உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலை கமி‌ஷனர் அலுவலகம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளது.அதேபோல சென்னையின் புறநகர் பகுதிகளான மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், தாம்பரம் மணிமங்கலம் போன்ற பகுதிகளில் வீட்டை விட்டு வெளியேறமுடியாமல் நீர் சூழ்ந்திருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதை, ட்விட்டரில் வீடியோ மற்றும் புகைப்படங்களாக  பதிவேற்றி வருகின்றனர். 

click me!