
சென்னை மாநகரம் கடந்த 200 ஆண்டுகளில் நான்காவது முறையாக ஒரே மாதத்தில் 1000 மி.மீட்டர் மழை பொழிவைக் கடந்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 26 அன்று வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. வட கிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. முதலில் பரவலாக மிதமான மழையாகத்தான் தமிழகத்தில் மழை பெய்துகொண்டிருந்தது. முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிதான் மழை தீவிரத்தைக் காட்டத் தொடங்கியது. இந்த மாவட்டங்களில் ஒரே நாளில் சுமார் 25 செ.மீ. மழை கொட்டியது. இதனால், சென்னை மாநகரமே வெள்ளக் காடானது. ஒரே நாளில் சென்னையைத் திணறடித்தது மழை.
அதைத் தொடர்ந்து நவம்பர் 11-க்குப் பிறகும் சென்னையை மழை பதம் பார்த்தது. பிறகு நவம்பர்21-ஆம் தேதியும் மழை கொட்டித் தீர்த்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையிலும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் மழை கொட்டி வருகிறது. அதற்கேற்றார்போல் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்தடுத்து 4 முறை உருவானதோடு அல்லாமல், சென்னை அருகேயே எல்லா காற்றழுத்த தாழ்வு மண்டலமும் கரையைக் கடந்தன. வட கிழக்கு பருவ மழை தொடங்கியதிலிருந்தே சென்னை தொடர்ந்து ரெட் அலர்ட்டிலேயே இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 200 ஆண்டுகளில் 4-ஆவது முறையாக 1000 மில்லி மீட்டர் (100 செ.மீ.) மழை பொழிவை இந்த ஆண்டு சென்னை மாநகரம் கடந்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் தன்னுடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “சென்னை ஒரே மாதத்தில் 1000 மில்லி மீட்டர் மழை பொழிவைத் தாண்டியிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளில் இது நான்காவது முறை. இதில் மூன்று முறை நவம்பர் மாதத்திலேயே நடந்திருக்கிறது.
இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு மழைக் காதலராக இந்த மகிழ்ச்சி. ஆனால், மழை ஏற்படுத்திய பாதிப்பில் அல்ல. சென்னையில் 1918 நவம்பரில் 1088 மி.மீ., 2005 அக்டோபரில் 1078 மி.மீ., 2015 நவம்பரில் 1049 மி.மீ., 2021 நவம்பர் 27 இரவு 7.30 மணி வரை 1003 மி.மீ. மழை பொழிந்திருக்கிறது. சென்னையில் இன்று இரவும் மழை பெய்யும். ஆனால், நேற்றைப் போல இருக்காது” என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.