Corona Vaccine Special Camp : மக்கள் கவனத்திற்கு ..! இனி எப்பொழுது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.. ? - அமைச்சர்

By Thanalakshmi VFirst Published Nov 26, 2021, 3:37 PM IST
Highlights

வாரத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்த கோரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இனி வாரத்திற்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும்  எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
 

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு , தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை மாநில அளவில் 11 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட வந்த முகாம்கள், இனி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே  நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்த போதிலும், 12 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் எனவும் இதுவரை 77.02 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 41.60 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளதாக கூறினார்.
2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது.

எனவே அவர்கள் தாமதிக்காமல் உடனடியாக தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் 15 மாவட்டங்களுக்கு மேல் அங்குள்ள மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 80 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என கூறிய அமைச்சர், மற்ற மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கு மேல் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாக பேட்டியளித்தார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை உள்பட 7 மாவட்டங்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் பதிவாகியுள்ளதாகவும், அப்பகுதிகளில் சுகாதாரதுறை சார்பில் போதிய விழிப்புணர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வருகிற 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிற 12-வது மெகா தடுப்பூசி முகாமுக்கு பிறகு, தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என கூறினார். மேலும், இனி வாரத்துக்கு ஒரு முறை தடுப்பூசி முகாமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பின்னர் டெங்கு பாதிப்புகள் குறித்து பேசிய அவர், தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 920 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 4,527 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 573 பேர் தற்போது சிகிச்சையில் இருக்கின்றனர் எனவும்  தெரிவித்தார்.

முன்னதாக ஞாயிற்றுகிழமைகளில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி சிறப்பு முகாம், மக்களின் வேண்டுகோளுக்கிணங்க சனிக்கிழமைகளில் நடத்தப்படும் என அரசு அறிவித்தது . அசைவ பிரியர்கள் ஞாயிற்றுகிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குவதாக வந்த கோரிக்கையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் அறிவித்தார். அதன் பின்னர், வாரத்திற்கு இரு முறை மெகா தடுப்பூசி முகாம் செயல்படுத்தப்படும் என புதிய அறிவிப்பு வெளியானது . அந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் அதிகரித்ததையடுத்து, வாரத்திற்கு ஒரு முறை என மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!