Chennai rain : சென்னை மக்கள் கவனத்திற்கு..இந்த ரூட்டில் செல்வதை தவிர்க்கவும் - முக்கிய அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Nov 26, 2021, 2:44 PM IST
Highlights

தொடர் மழையின் காரணமாக, சென்னை பெருநகரின் மழை நீர் தேங்கியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளம் காரணமாக, முக்கிய சாலைகளில் போக்குவரத்துமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னையில் முக்கிய சாலைகளில் மழை நீர்  தேங்கியுள்ளது . மேலும் பல்வேறு சுரங்கப்பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தின் நிலவரங்கள் மாற்றப்பட்டுள்ளது. 

சென்னை பெரு நகர போக்குவரத்து  காவல் துறை விடுத்துள்ள பத்திரிக்கை குறிப்பில் , தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் போக்குவரத்து தடைவிதிக்கப்பட்டுள்ளது . அதன் படி, ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மழைநீர் பெருக்கு காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள பகுதிகளையும் வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, சென்னை பெருநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கே.கே.நகர் ஜி.எச்.க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன. கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது. வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஆற்காடு ரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. வாணி மஹால் முதல் பென்ஸ் பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையொட்டி , தமிழகம் முழுவதும் பரவலாக மழை வெளுத்து வாங்கி வருகிறது . சென்னை, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நாகை ,கடலூர், திருவாரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . மேற்கு வங்ககடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவ வாய்புள்ளதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது . மேலும் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம்  தற்போது சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடன் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்றும் வானிலை மையம் கணித்து கூறியுள்ளது. 
 

click me!