
தருமபுரி
கொசுப்புழுக்கள் உற்பத்தி மையமாகிப்போன தருமபுரி நெடுஞ்சாலை அலுவலக வளாகத்தில், தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் என மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றன.
டெங்கு பாதிப்பு மரணங்களும் இம்மாவட்டத்தில் அதிகளவில் உள்ளன. சமீபத்தில் தருமபுரி மாவட்டத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்டோரும் வருகை தந்து, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவோரை பார்வையிட்டு, மருத்துவமனைகளை ஆய்வு செய்துவிட்டு சென்றனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகரத்திலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் காரணிகளை மக்களே அகற்றி தங்களதுப் பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மக்களின் குடியிருப்புகள், நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை நாள்தோறும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் என அனைத்து அலுவலகங்களில் தூய்மைப் பணி தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தைச் சுற்றி புற்கள் முளைத்து, ஏராளமான குப்பைகள் கழிவுகள்போல தேங்கி கிடக்கின்றன. மேலும், அங்கு தண்ணீர் தொட்டி சுத்திகரிக்கப்படாமல் உள்ளது.
இதனால், அந்த வளாகம் கொசுக்கள் உற்பத்திக் கூடாரம் போல மாறிவிட்டது. மேலும், பகல் வேளையில் ஏராளமான கொசுக்கள் தொல்லை கொடுக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் என அப்பகுதிக்கு வருவோர் அச்சப்படுகின்றனர்.
எனவே, கொசுக்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, தருமபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகத்தை முதலில் தூய்மைப்படுத்த வேண்டும் என்று அபராதத்தை அவர்களுக்கு விதியுங்கள் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.