ஜனவரி 1-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி நடைப்பயணம் அறிவிப்பு…

First Published Nov 9, 2017, 8:31 AM IST
Highlights
On January 1 a walk from the Kanyakumari to the governors mansion ...


தருமபுரி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 1-ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் சிறப்பு நிர்வாகக் குழுக் கூட்டம், தருமபுரி மாவட்டம், சிட்லிங் ஊராட்சி முள்ளிக்காடு கிராமத்தில் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு மாநிலக் கொள்கை பரப்புச் செயலர் பி.பெருமாள் தலைமைத் தாங்கினார்.

சித்தேரி ஊராட்சிக்கு உள்பட்ட வாச்சாத்தி - கலசப்பாடி வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழைக் காலங்களில் இந்தச் சாலையை, மக்கள் பயன்படுத்த மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாணவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதேபோல், புதுவளவு - சூலக்குறிச்சி, கோம்பை - எருமாங்கடை, கோட்டப்பட்டி - சிட்லிங் சாலைகளும் மோசமாக பழுதாகியுள்ளன.

எனவே, மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் அனைத்துச் சாலைகளையும் சீரமைப்பு செய்ய வேண்டும்.

எஸ்.டி சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்வோருக்கு ஒரு மாத காலத்திற்குள் சாதிச் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி சார்பில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி நடைப்பயணம் மேற்கொள்வது” உள்ளிட்ட தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில், தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் பொ.பா.ராமசாமி, மாநிலச் செயலர் டி.வேலாயுதம், மாநிலப் பொருளாளர்  ஆர்.மாது, தருமபுரி மாவட்டச் செயலர் ஏ.வடிவேல், ஒன்றியத் தலைவர் லட்சுமணன், கிளைத் தலைவர் ஏ.அன்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

click me!