
கடலூர்
கடலூரில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதால் மாற்றுத் திறனாளிகள் கைகளில் சாமி படங்களை ஏந்திக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் இலட்சிய முன்னேற்றச் சங்கத்தினர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்து கோவில்களில் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக மாற்றுத்திறனாளியுடன் ஒருவர் செல்வதற்கு சிறப்பு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சந்தோஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சாமிகளின் உருவ படங்களை கையில் பிடித்தபடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதில் மாவட்டப் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மகளிரணி தலைவி சித்ரா, பகுதி தலைவர்கள் ஆறுமுகம், ஜெயபாலன், பாலமுருகன், தில்லைநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர் மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், “சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றால் மாற்றுத் திறனாளிகளை மக்களோடு மக்களாக வரிசையில் வரும்படி கோவில் ஊழியர்கள் கூறுகிறார்கள். அடையாள அட்டையை காண்பித்தாலும் அனுமதி மறுக்கிறார்கள்.
எனவே, அனைத்து இந்து கோவில்களிலும் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருவதற்கு வசதியாக மாற்றுத்திறனாளியுடன் துணையாளர் ஒருவரை உடன் அழைத்து செல்ல சிறப்பு அட்டை ஒன்று வழங்க வேண்டும்.
இதை அனைத்து கோவில்களிலும் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.