ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி பெறவில்லை – சுற்றுசூழல் அமைச்சர் ‘பகீர்’ தகவல்

First Published Feb 28, 2017, 6:32 PM IST
Highlights
The federal government did not allow hydrocarbon project - Environment Minister information


நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி பெறவில்லை என தமிழக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து 12 நாட்களாக அப்பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கிராம பகுதிகளில் விவசாயிகளிடம் எண்ணை வளங்கள் பற்றி ஆய்வு செய்யப் போவதாக கூறி பல ஏக்கர் நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்தது.

அங்கு ஆழ் குழாய் கிணறு அமைத்து எண்ணை, எரிவாயுவை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு   அனுமதி வழங்கிய   பின்னரே ஹைட்ரோ கார்பன் குறித்து வெளியே தெரிய வந்தது.

இந்த திட்டம் நிறைவேறினால் விவசாயம் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

12 நாட்களாக நடைபெறும் இந்த போராட்டத்திற்கு தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் எதிரொலியாக எதிர்பார்க்காத வகையில் நெடுவாசல் கிராமமே திக்குமுக்காடும் வகையில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.    

இதனிடையே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி பெறவில்லை என்று தமிழக சுற்றுசூழல் அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கருப்பண்ணன் கூறியதாவது :

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து அனுமதி பெறாமலேயே திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்துள்ளது.

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு இதுவரை எந்த அனுமதியும் பெறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!