
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளின் பத்திரபதிவுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தனக்கு மிரட்டல் வருவதாக நீதிமன்றத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் அங்கீகரிக்கபடாத வீட்டு மனைகளின் பத்திரபதிவுக்கு தடை விதிக்க கோரி உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப்பதிவு செய்யவும், அங்கீகாரமில்லாத மனைகளை பத்திரப் பதிவு செய்யவும், கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்தது.
இந்தத் தடையை நீக்கக்கோரி, ரியல் எஸ்டேட் வணிகர்கள், நில உரிமையாளர்கள் என, பலரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பல ஆண்டுகள் நிலம் வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், ஏறகனவே அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கூறப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்யவும், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுத்து விட்டது.
மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசித்து ஒருங்கிணைந்த செயல் திட்டத்தினை நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கை மார்ச் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், வழக்கறிஞர் ராஜேந்திரன், ரியல் எஸ்டேட் அதிபர்களிடமிருந்து மொபைல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தனக்கு மிரட்டல் வருவதாக தலைமை நீதிபதியிடம் புகார் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, ராஜேந்திரனுக்கு தலைமை நீதிபதி அனுமதி வழங்கினார்.