பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்த மத்திய அரசு, பட்ஜெட்டில் அதைப்பற்றி அறிவிக்காதது வருத்தமளிக்கிறது…

Asianet News Tamil  
Published : Feb 02, 2017, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்த மத்திய அரசு, பட்ஜெட்டில் அதைப்பற்றி அறிவிக்காதது வருத்தமளிக்கிறது…

சுருக்கம்

கோவை,

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவித்த மத்திய அரசு, பட்ஜெட்டில் அதைப்பற்றி அறிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று கோவை மாவட்ட பயணிகள் நல சங்க தலைவர் எம்.ஜமீல் அகமது தெரிவித்தார்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் இரயில்வே துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பட்ஜெட்டுக்கு ஒரு சிலர் வரவேற்பு அளித்தும், ஒரு சிலர் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் குறித்து மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த துரைசாமியின் கருத்து:

பேருந்துகளை காட்டிலும் இரயிலில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் ஏழை எளிய, நடுத்தர மக்கள் அதிகளவு இரயிலில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள்.

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில் இரயில் கட்டணம் குறையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் குறையவில்லை.

வெகுதூரத்துக்கு செல்லும் இரயில் கழிவறை அதிகளவில் துர்நாற்றம் வீசும் என்பதால் அதன் அருகேயுள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது மிகவும் சங்கடமானது மற்றுமின்றி சிரமமானதும் கூட. தற்போது அனைத்து இரயில்களிலும் பயோ கழிவறை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவறை சுத்தமாக இருப்பதுடன், துர்நாற்றமும் வீசாது. இந்த திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

பொள்ளாச்சியை சேர்ந்த உதயகுமாரியின் கருத்து:

கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு இரயில் இயக்க இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதுகுறித்த அறிக்கை வெளியாகாதது ஏமாற்றம் அளிக்கிறது. பயணிகள் அதிகமாக வரும் இரயில் நிலையங்களில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும்போது, கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டியது இருந்தது. தற்போது அந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது.

கோவை மாவட்ட பயணிகள் நல சங்க தலைவர் எம்.ஜமீல்அகமது கூறியது:

இந்தியா முழுவதும் 500 இரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகளை சேலம் கோட்டத்தில் உள்ள இரயில் நிலையங்களுக்கு அதிக எண்ணிக்கையில் செய்து தர வேண்டும்.

கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இரவு நேர விரைவு இரயில் விட வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கேட்டு வருகிறார்கள். ஆனால் அந்த கோரிக்கை பட்ஜெட்டில் ஏற்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

கோவை – இராமேசுவரம் இடையே தற்போது ஒரு நாள் தான் இரயில் இயக்கப்படுகிறது. அதை மூன்று நாள்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால், வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவையில் இருந்து மராட்டிய மாநிலம் ஷீரடிக்கு இரயில் இயக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

நீண்ட நாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள போத்தனூர் – பொள்ளாச்சி அகல இரயில்பாதை பணிகளை கோடை விடுமுறைக்கு முன்பு முடிக்க வேண்டும். அப்போது தான் கோடை விடுமுறைக்காக கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு இரயில் விட முடியும்.

அதுபோன்று வட மாநிலங்களுக்கு செல்லும் இரயில் கோவை இரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள்தான் நின்று செல்கின்றன. அதை 10 நிமிடமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். அதுகுறித்தும் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

பெருந்துறையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுபற்றிய அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படாதது வருந்தத்தக்கது.

கோவை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார் கூறியதாவது:–

கோவையில் மெட்ரோ இரயில் அறிவிக்காதது, தமிழகம் மற்றும் கேரள மக்களின் வசதிக்காக மேட்டுப்பாளையம் – கோவை – திருவனந்தபுரம் புதிய இரயில் விட வேண்டும் என்று கோவை மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை இரயில் நிலையத்தின் நெருக்கடியை தீர்க்க வடகோவை, பீளமேடு ஆகிய இரயில் நிலையங்களை மேம்படுத்த எந்த அறிவிப்பும் இல்லாதது கோவை மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

என்று அவர்கள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
நாங்கள் திமுகவுடன் நிற்போம் ...அழுத்தமான ஆதரவு கொடுப்போம் ! கமலஹாசன் பேட்டி