
சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை அளித்து தீர்ப்பளித்தபோது, சிறுமியின் தந்தை கதறி கதறி அழுத காட்சி பார்ப்பவர்களின் மனதை உருக செய்தது.
குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குத் தண்டனை அறிவித்ததை அறிந்து சிறுமி ஹாசினியின் தந்தை மகளின் படத்தை வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்பவர்களின் மனதை உருகவைத்தது.
சென்னை, முகலிவாக்கத்தில் சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் ஐடி பொறியாளர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த், 10 மாதங்கள் கழித்து தாய் சரளாவை கொலை செய்து, தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், தனிப்படை போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்தை இரண்டாவது முறையாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தஷ்வந்த், சென்னை
அழைத்து வந்து சிறையில் அடைக்கப்பட்டான்.
சிறுமி கொலை வழக்கு தொடர்பாக 35 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பு குறித்து நீதிபதி வாசிக்க ஆரம்பித்தார். முடிவில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
நீதிபதியின் தீர்ப்பைக் கேட்ட சிறுமி ஹாசினியின் தந்தை, கண்ணீர் விட்டு அழுதார். தனது மகளின் படத்தைப் பார்த்து பார்த்து அவர் கதறி அழுதது பார்த்தவர்களின் மனதை உருக செய்தது.
இதன் பின்னர், சிறுமியின் தந்தை பாபு, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, என் குழந்தைக்கு நடந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்பால் தனக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த சட்டப் போராட்டம் ஓராண்டு காலம் மேற்கொள்ளப்பட்டது. இனிமேல் வேறு யாருக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டது. நீதி கிடைக்கப் போராடிய மாங்காடு போலீசாருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி என்றார்.