பட்டியல் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 1560 கோடி ரூபாய் மாற்றப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் முக்கிய தேர்தல் அறிவிப்பான மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு களம் இறங்கியுள்ளது. சிறப்பு முகாம் நடத்தி விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. புதியதாக நிதி எதுவும் ஒதுக்காமல், பட்டியலின சமுதாயத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கக்கூடிய SCSP நிதியில் இருந்து 1560 கோடியை பொது மகளிர் மாதாந்திர திட்டத்திற்காக மாற்றி சமூக நீதிக்கு பெரும் பிழை இழைத்துள்ள இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். மேடைகளிலும் படங்களிலும் மட்டும் போலி சமூகநீதி பேசி வரும் இந்த அரசு உண்மையில் பட்டியல் இன மக்களுக்கு இத்தகைய துரோகம் இழைத்திருப்பது, இவர்களின் உண்மை முகத்தை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் நிதியை வேற்று பணிகளுக்கு மாற்றுவது பெரும் அநீதி, இந்த அரசு உடனடியாக SCSP நிதியை உரிய துறையில் ஒப்படைக்க வேண்டும் என கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
இதனிடையே தமிழக அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய செயல்படும் என கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்
Tomato: தாறுமாறாக எகிறும் தக்காளி விலை! இன்று முதல் இந்த 500 இடங்களில் 60 ரூபாய்க்கு கிடைக்குமாம்!