
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த லூர்து பிரான்சிஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அறிவாளால் வெட்டி கொன்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் சில தினங்களுக்கு முன்பு சேலத்திலும் ஒரு விஏஓ கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
இதனால் வி.ஏ.ஓ.க்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. மேலும், அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் நேர்மையான விஏஓக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விஏஓ சங்கம் கடிதம் அனுப்பியது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநிலத் தலைவர் கிருஷ்ணகுமார் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வி.ஏ.ஓ.,க்கள் பாதுகாப்புக்கு உடனடியாக தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் விபத்து: 15 பேர் பலி!
இந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரும் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அரசு கூடுதல் செயலர் வைதேகி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “சேலம் மாவட்டம், ஓமலுார் தாலுகாவில் உள்ள மாணாத்தான் பகுதியில், மணல் கடத்திய டிராக்டர், பொக்லைன் வாகனத்தை, கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் பிடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்னையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவங்கள் நடப்பதால், தற்காப்பிற்காக பயிற்சியும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கியும் வழங்க, வருவாய் துறை ஊழியர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மீது உரிய நடவடிக்கை எடுத்து, அறிக்கை அனுப்பு வேண்டும். மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்து நிலுவையில் உள்ள, புகார்கள் குறித்த விபரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.