தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளோடு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரம்
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. திமுக சார்பாக தனது கூட்டணி கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடரவுள்ளது. இதே போல அதிமுக மற்றும் பாஜகவும் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சு நடத்துகிறது.
அரசியல் கட்சி தலைவர்களோடு ஆலோசனை
இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று இரவு சென்னை வந்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவரை வரவேற்றார். இதனை தொடர்ந்து இன்று காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கருத்து கேட்கிறார். மதியம் 1 மணி வரை இந்த கருத்து கேட்பு நடைபெறுகிறது. பின்னர், மதியம் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். இரவு 8 மணி வரை இந்த கூட்டமானது நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தல் எப்போது.?
அதனைத்தொடர்ந்து 24ம் தேதி தென் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை, தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது. மதியத்துக்கு பிறகு தலைமைச் செயலாளர் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரிக்கிறார்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தேர்தலை நடத்த எந்த தேதி சரியான தேதி, பள்ளி தேர்வுகள், திருவிழாக்கள் மற்றும் முக்கிய விஷேசங்கள் தொடர்பாக கேட்டறியவுள்ளனர். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, பணம் விநியோகம் தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.
இதையும் படியுங்கள்