திருமாவின் பிளான் சக்சஸ்: அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது விசிக, பானை சின்னமும் ஒதுக்கீடு

By Velmurugan s  |  First Published Jan 11, 2025, 10:33 AM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மாநிலக் கட்சியாக அங்கீகரித்துள்ள தேர்தல் ஆணையம் அக்கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக பானை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்துள்ளது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக நிலைநிறுத்தப்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி சார்பில் விசிக.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்திலும், பொதுச்செயலாளர் ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியில் திமுக.வின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

முன்னதாக திருமாவளவனையும் திமுக சின்னத்திலேயே போட்டியிட கோரப்பட்டதாகவும், ஆனால் கட்சியின் நலன் கருதி அவர் பானை சின்னத்தில் போட்டியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்படி விசிக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இது தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தது. அதனை பரிசீலனை செய்த இந்திய தேர்தல் ஆணையம் விசிக.வை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை தேர்தல் ஆணையம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த கடிதத்தில் தேர்தல் ஆணையத்தின் தகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெற்றுள்ளதைத் தொடர்ந்து கட்சியை மாநில கட்சியாக அங்கீகரிப்பதாகவும், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்கீடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால் விசிக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் திரு. திருமாவளவன் அவர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

click me!