மதுரையில் டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் பேரணி நடத்தினர். இதையடுத்து, திட்டம் கைவிடப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
மதுரையில் ஜனவரி 7-ம் தேதி டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் மேலூர் சிட்டம்பட்டி டோல்கேட்டிலிருந்து மதுரை மாநகரான தல்லாகுளத்திற்கு 20 கி.மீ. தூரத்திற்கு மாபெரும் பேரணி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தன்னெழுச்சியாக போராட்டமாக நடைபெற்று தமிழக அரசை அதிர்ச்சியடைய செய்தது. இப்பிரச்சினை தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இந்நிலையில் எந்த காரணத்திற்காகவும் டங்ஸ்டன் திட்டம் வராது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று மாலை, மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச் சுற்றி அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக, நமது மாண்புமிகு மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்திருந்தார். தமிழக அரசையும், சுரங்கம் அமைப்பது தொடர்பாக, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.
நமது மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவிருக்கிறார். அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, நமது மத்திய அமைச்சர் அவர்கள் றிவிக்கவிருக்கிறார்.
விவசாயிகள் நலன் சார்ந்தே நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன். நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.