அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து அதிமுக கேள்வி எழுப்பி வருகிறது. இதனால் அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்திய நிலையில், இன்று வெள்ளை சட்டையுடன் 'யார் அந்த சார்' பேட்ஜ் அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
அண்ணா பல்கலை. விவகாரம்
அண்ணா பல்கலைககழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரை தவிர்த்து மற்றொருவரும் தொடர்பில் இருப்பதாகவும், யார் அந்த சார் என அதிமுக தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்கள் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அவையில் பேசுவது காட்சிப்படுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டது.
யார் அந்த சார்.?
இந்நிலையில் அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு யார் அந்த சார் பேட்ஜ் உடன் வெள்ளை சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். சட்டப்பேரவையில் இன்று ஆளூநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். கருப்பு சட்டை அணிந்து வந்தால் எடப்பாடி பழனிசாமி பேசுவதை காட்டாமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளதால் வெள்ளை சட்டை அணிந்து வந்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இவன் தான் அந்த சார்.?
இதனிடையே அண்ணா நகரில் மாணவி ஒருவர் பாலியல் வன்ம்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிமுக பிரமுகர் சுதாகர் கைது செய்யப்பட்ட நிலையில், சுதாகர் புகைப்படத்துடன் இவன் தான் அந்த சார் என்ற வாசகத்துடன் துண்டு சீட்டை திமுகவினர் மக்களிடன் வினியோகித்தனர். இந்தநிலையில் அதிமுகவிற்கு போட்டியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். சட்டப்பேரவை நுழைவு வாயிலில் திமுக உறுப்பினர்கள் நோட்டீஸ் காண்பித்து கோஷம் எழுப்பினர்.
யார் அந்த சார்? இவர் தான் அந்த சார் என நோட்டீஸ் காண்பித்து திமுக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக உறுப்பினர்கள் காண்பித்த நோட்டீஸ்சில், அண்ணாநகர் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் சுதாகர் புகைப்படம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் யார் அந்த சார் ? இவன் தான் அந்த சார் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.