
கடலூர் அருகே தென்னந்தோப்பில் தேங்காய் திருடியபோது துரத்தியதில் தப்பியோடி, ஆற்றில் குதித்த இரண்டு வாலிபர்கள் மரணமடைந்தனர்.
கடலுார் முதுநகர் அடுத்த நடுத்திட்டு பகுதியை சேர்ந்த தருமன், மகாபிரபு, ராஜசேகர், தங்கதுரை நான்கு பேரும் நேற்று முன்தினம் 3:30 மணியளவில் நடுத்திட்டு உப்பனாற்றங்கரை அருகே உள்ள தென்னந்தோப்பில் மரத்தில் ஏறி தேங்காய் திருடினர்.
அப்போது, அங்கு வந்த தோட்டத்தின் உரிமையாளர், கூச்சலிடவே, நான்கு பேரும் மரத்திலிருந்து கீழே இறங்கி தப்பியோடி அருகே இருக்கும் உப்பனாற்றில் குதித்தனர். இதில் , தங்கதுரை நடுத்திட்டிலும், ராஜசேகர் நீந்தி செம்மங்குப்பத்திலும் கரையேறினார். தருமன் மற்றும் மகாபிரபு இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
இதற்கு இடையே, தேங்காய் திருடியவர்களை காப்பாற்றுவதில் போலீசார் அலட்சியம் காட்டுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் செம்மங்குப்பத்தில் இரவு 7:00 மணிக்கு கடலுார் - சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையம் முன்பு ஒன்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தர்மன், மகா பிரபு என்ற இளைஞர்களின் மரணத்துக்கு தென்னந்தோப்பு உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இதில் இப்பிரச்சினை குறித்து புகார் கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.