
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் லாரி மோதியதில் கால்களை இழந்த பெண் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த பெண்ணுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இந்திரா காந்தி சிலை ஒன்று உள்ளது. இந்த சிலையின் மீது கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று நேற்று மோதியது.
அப்போது, சிலையின் அருகே தனியார் கல்லூரி கல்வியியல் கல்லூரியில் பயின்ற இரண்டாம் ஆண்டு மாணவி கோட்டகொல்லையைச் சேர்ந்த முனீஸ்வரி (21) என்பவர் உர்கார்ந்திருந்தார்.
லாரி மோதி சிலை விழுந்ததில், அருகில் உட்கார்ந்திருந்த மாணவி முனீஸவரியின் இரண்டு கால்களும் துண்டாயின.
அதனைக் கண்டு அருகிலிருந்தவர்கள் முனீஸ்வரியை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தனர். பின்னர், உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் முனீஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி சிலை விழுந்து மாணவி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.